Home மாவட்டங்கள் சென்னை அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்

சென்னை, அக். 4-
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அதிமுக நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, தவெகவில் பலர் இணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, செம்மலை உள்ளிட்டோர் தேர்தல் தோல்விக்குப் பிறகு தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். முருகுமாறன் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன். கோடிகளை கொண்டவர்களையே வேட்பாளர்களாகத் தேர்வு செய்ததால், தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக நமது கழகம் பின்தங்கியுள்ளது. உழைத்தவர்களைப் புறக்கணித்து, கிடைத்தவர்களை வைத்து அரசியல் செய்தால் களத்தில் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறக்கூடிய எனது சொந்தத் தொகுதியான காட்டுமன்னார்கோவிலை எனக்கு ஒதுக்காமல் தலைமை செய்த துரோகத்தை என் நெஞ்சம் மறக்க மறுக்கிறது. மாணவப் பருவம் முதல் பயணித்து பணியாற்றிய இப்பேரியக்கத்திலிருந்து விலக வேண்டிய நிலையை தலைமை ஏற்படுத்தியதை எண்ணி மனம் வலிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி; நான் வளர்த்த கட்சி என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.