Home மாவட்டங்கள் சென்னை அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்

அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்

சென்னை, அக். 13-
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அந்த எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை தொடர்பாக 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர், அவர்கள் தவெகவில் இணைந்தனர். இவர்களில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் முறையே மதுராந்தகம், தாராபுரம் தனித்தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, எம்எல்ஏக்களாகப் பொறுப்பேற்றனர். 6 பேரின் ராஜினாமா கடிதங்களையும் சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர். தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில், ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது செல்லாது என்றும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மனுக்களில் கோரியிருந்தனர். இந்த வழக்குகளில் மனுதாரர்கள், சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வெளியிட்டது. அதில், 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை குறித்து 2 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறி, இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.