Home மாவட்டங்கள் பெங்களூர் தசரா – அரண்மனை வளாகத்தில்கோலப் போட்டி: 265க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தசரா – அரண்மனை வளாகத்தில்கோலப் போட்டி: 265க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மைசூரு, அக். 13-
நாடஹப்பா மைசூரு தசரா விழாவை முன்னிட்டு, மைசூரு அரண்மனை வளாகத்தில் இன்று மாநில அளவிலான கோலப் போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணராஜா தொகுதி எம்.எல்.ஏ. டி.எஸ்.ஸ்ரீவத்ஸா போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
மத்திய அரசு கர்நாடக ஆளுநராகப் பெண்களையே நியமித்து, பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. நவராத்திரி காலத்தில் தாய்மார்கள் மிகுந்த உற்சாகத்துடன் இக்கோலப் போட்டியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.
இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 265க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். அரண்மனைக்கு முன்பாக வரையப்பட்ட விதவிதமான கோலங்கள் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தன.
போட்டியில் மைசூருவைச் சேர்ந்த 63 வயதான சரசம்மா (எண்: 186) முதல் பரிசையும், ஸ்ரீரங்கப்பட்டணா காமினஹள்ளியைச் சேர்ந்த சாவித்திரி (எண்: 56) இரண்டாம் பரிசையும், விஜயநகரத்தைச் சேர்ந்த மாலா (எண்: 74) மூன்றாம் பரிசையும் வென்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிகாந்த் ரெட்டி, கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆர்.ஐஸ்வர்யா, மகளிர் மற்றும் குழந்தைகள் தசரா உபகுழு தலைவர் சூடாமணி, செயலாளர் நாகராஜ், துணை சிறப்பு அதிகாரி சவிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.