Home மாவட்டங்கள் பெங்களூர் பப்பில் நடுராத்திரி தகராறு: போலீஸ் அதிகாரியையே அறைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

பப்பில் நடுராத்திரி தகராறு: போலீஸ் அதிகாரியையே அறைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

பெங்களூரு, அக். 13-
பெங்களூருவில் உள்ள பப் ஒன்றில் நள்ளிரவில் போதையில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திரப் பிரதேச கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அவரது நண்பர்களும் சேர்ந்து, கடமையிலிருந்த காவல் ஆய்வாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குப்பத்தில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி விகாஸ் மர்மத், தனது நண்பர்களான நிதேஷ், அபய் உதய் சிங், ரோஷன் ஆகியோருடன் பெங்களூரு கப்பன்பார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘காவூர்’ பப்புக்கு நள்ளிரவில் சென்றுள்ளார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு (சி.சி.பி) காவல்துறையினர் சீருடையிலேயே அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சோதனையின் போது காவல்துறையினர் அடையாள அட்டை கேட்டதால் ஆத்திரமடைந்த விகாஸ் மர்மத், அதிகாரிகளை அவதூறாகத் திட்டியதோடு, தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளரைக் கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார்.
தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று மிரட்டல் விடுத்த அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி விகாஸ் மர்மத் மற்றும் அவரது 3 நண்பர்கள் மீது காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.