
சென்னை, அக். 13-
கிருஷ்ணா நதி நீர் மற்றும் நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக முதல்வர் விஜய் இன்று ஆந்திரா செல்கிறார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார்.
ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 11 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், இந்த நீர் முறைப்படி வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கிருஷ்ணா கால்வாய் பராமரிப்புக் கட்டணமாக தமிழக அரசு, ஆந்திர நீர்வளத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வழங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரை முறைப்படி திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துவதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் விஜய் நேரில் சந்திக்கிறார். இதனுடன், நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாகவும் அவர் வலியுறுத்த உள்ளார். இந்தப் பயணத்திற்காக, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், தலைமைச் செயலர் சாய்குமார், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோருடன் முதல்வர் விஜய் தனி விமானத்தில் புறப்படுகிறார். அவர் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மாலை 4.15 மணிக்கு முதல்வர் விஜய் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று மாலை 6 மணிக்கு வழிபடுகிறார். பின்னர், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை சந்திக்கிறார். இதையடுத்து, இரவு 8 மணிக்கு ஆந்திராவில் இருந்து சென்னை திரும்புகிறார். முதல்வர் விஜய் வரும் 16-ம் தேதி கோவை மாவட்டத்துக்குச் செல்ல உள்ளார். அங்கு ரூ.300 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.













