
வாஷிங்டன், ஜூலை 21- சேலம் சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மணிமங்கலத்தைச் சேர்ந்த ஹரிஹரன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்திருந்த மனுவில், “எனது தம்பி கோபி (54) கொலை வழக்கு ஒன்றில் கைதானார். அவருக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த 1994-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு காரணமாக ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 32 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி கோபியின் அறையில் சோதனை நடத்திய சேலம் சிறை வார்டன்கள் கோபி செல்போன் பயன்படுத்தியதாகக் கூறி அவரது கைகளை பின்புறமாக கட்டி கால் பாதத்தில் லத்தியால் அடித்து தாக்கியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சிறையில் உள்ள கோபிக்கு சிறையில் உள்ள நடத்தை விதிகள் நன்கு தெரியும் என்பதால் கோபி செல்போன் பயன்படுத்தவே இல்லை. முன்கூட்டிய விடுதலைக்காக காத்திருக்கும் எனது தம்பியை சிறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் தாக்கியுள்ளனர். ரத்த அழுத்தம், இருதய நோயாளியான எனது தம்பிக்கு சிறைக்குள் உரிய மருத்துவ சிகிச்சையும் அளி்க்கவி்ல்லை. இதுபோல, 30-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை வார்டன்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், எனது தம்பி்க்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆஜரானார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு, சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும், சிறையில் உள்ள கோபியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23-க்கு தள்ளி வைத்தனர்.














