Home செய்திகள் உலக செய்திகள் ரஷிய தடைகள் சட்டத்தில்டிரம்ப் கையெழுத்து

ரஷிய தடைகள் சட்டத்தில்டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன், செப். 19:
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம்–2026’-க்கு கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகமாக வாங்கும் முதல் 5 நாடுகளின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது. அந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை இந்த மசோதாவை நிறைவேற்றிய இரண்டு நாள்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை டிரம்ப் சட்டத்தில் கையெழுத்திட்டார். சுமார் 18 மாதங்களாக நீடித்த அரசியல் விவகாரம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய மசோதாவின் ஒரு வடிவம், செனட் உறுப்பினர்கள் லிண்ட்சே கிரஹாம் மற்றும் ரிச்சர்ட் புளூமென்தால் ஆகியோரால் 2025 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷியாவின் எரிசக்தி ஏற்றுமதி வருவாயை கடுமையாகக் குறைத்து, 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன் போருக்கு முடிவு காண மாஸ்கோவை பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திப்பதே மசோதாவை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கங்களாகும். எந்த நாட்டையும் இலக்காகச் சட்டம் குறிப்பிடவில்லை. மாறாக, முந்தைய 12 மாதங்களில் மொத்த அளவு அடிப்படையில் ரஷிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகமாக இறக்குமதி செய்த 5 நாடுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி, வெளியுறவு மற்றும் எரிசக்தித் துறைச் செயலர்களுடன் ஆலோசித்து அடையாளம் காண வேண்டும். இந்தப் பட்டியல் ஒவ்வொரு 180 நாள்களுக்கும் மறுஆய்வு செய்யப்படும். வரி விகிதம் அதிகபட்சம் 100 சதவீதமாக இருக்கலாம்; அதை நிர்ணயிப்பது அதிபரின் விருப்பம். ரஷிய எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கு வரி விதிப்பது சட்டப்படி கட்டாயமல்ல. எனினும், மசோதா ஆதரவாளர்கள், குறிப்பாக புளூமென்தால், சீனாவும் இந்தியாவும் ரஷிய எரிசக்தி கொள்முதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். “சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சொல்கிறேன்: உங்கள் நடவடிக்கைகளைச் சீர்செய்யுங்கள். எண்ணெய், எரிவாயுவை வேறு இடத்தில் வாங்குங்கள்” என்று அவர் புதன்கிழமை தெரிவித்தார்.