
வாஷிங்டன, செப். 19- கிரீன்லாந்து தீவின் முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதுதொடர்பாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நிர்வாகத்துடன் ‘ஆயுட்கால ஒப்பந்தம்’ கையெழுத்தாகியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இருதரப்பு பிரதிநிதிகளுடன் பேசி மிக முக்கியமான உடன்பாட்டை எட்டியுள்ளோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் அமெரிக்கா நிரந்தரமாகக் கவனித்துக்கொள்ளும். இதற்காக அமெரிக்க அரசுக்கு ஒரு பைசாகூட செலவு கிடையாது. இனிமேல் அமெரிக்காவின் நேரடி எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, எந்த எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவத் தளம் அமைக்கவோ, படைகளை நிறுத்தவோ, அங்குள்ள முக்கியத் துறைகளில் முதலீடு செய்யவோ முடியாது. இந்த ஒப்பந்தத்துக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இது நிரந்தர ஒப்பந்தமாகும். இதன்படி, கிரீன்லாந்தின் பொருத்தமான பகுதிகளில் அமெரிக்காவின் பிரம்மாண்டமான ராணுவத் தளங்களை அமைக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்.
















