
சென்னை, அக். 8- மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தவெக தலைமையில் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. தொடக்கத்தில் இருந்தே தவெக அரசை விமர்சித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போதும் அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. விசிகவும் அவ்வப்போது அரசை விமர்சித்து வருகிறது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக தலைவர்கள் மீது முதல்வர் விஜய் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, 4 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பாமகவை தவெக கூட்டணியில் சேர்க்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், தவெக அமைச்சர்களில் சிலரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதால், இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்போது, பாமக கூட்டணியில் இணைந்தால், சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.















