Home செய்திகள் தேசிய செய்திகள் இது சிவனின் தாண்டவம்; வியூகம் தேவையில்லை

இது சிவனின் தாண்டவம்; வியூகம் தேவையில்லை

புதுடெல்லி, அக். 13- எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இது ஒற்றைப் போராட்டம்; பலதரப்பு போராட்டம் அல்ல. எங்கள் இலக்கு நிறைவேறும் வரை ஓயமாட்டோம். “தற்போதைய போராட்டத்துக்கு ஒரு வியூகம் வகுக்க வேண்டும் என்று எனது தங்கை பிரியங்கா காந்தி அறிவுரை கூறினார். அதற்கு நான் தெளிவான பதிலை அளித்தேன். இது சிவனின் தாண்டவம். இதற்கு வியூகம் தேவையில்லை. இன்று உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி செல்கிறோம். நாளை வேறு ஏதாவது போராட்டம் நடைபெறும். இடைவிடாமல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். சிவனின் தாண்டவத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். “அமலாக்கத் துறை, சிபிஐ, வெளியுறவுத் துறையைச் சேர்ந்த 200 அரசு அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் எங்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறுகின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறார். அவரைப் பாதுகாக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. எங்களது போராட்டம் ஒரு நாளில் ஓயாது; இடைவிடாமல் தொடர்ந்து போராடுவோம். “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும், நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எங்கள் கவலையை அவர் புரிந்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இந்தியா கூட்டணி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மனு தாக்கல் செய்வார்கள்.