
மோகி, செப். 9- சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய மகளிர் அணி ஜப்பானை எதிர்த்து தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் பூர்ணிமா யாதவ் (14, 46-வது நிமிடம்) மற்றும் கீதா யாதவ் (41, 45-வது நிமிடம்) தலா இரண்டு கோல்களும், கிருஷ்ண சர்மா (5-வது நிமிடம்), சுப்ரியா (9-வது நிமிடம்), சனிகா சந்திரகாந்த் (50-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியுடன், இந்திய மகளிர் அணி தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் 11-1 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்தது. மூன்று வெற்றிகளுடன் 9 புள்ளிகளை பெற்று, இந்திய அணி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை எதிர்கொள்கிறது. சீனா, இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது.
















