
புதுடில்லி, அக். 13- 2027-28ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7 சதவீதமாக உயரும் என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது. ஐஎம்எப் வெளியிட்டுள்ள புதிய பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், 2026-27ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட ஜூலை மாத அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பணவீக்கம் 4.7 சதவீதத்தை எட்டும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகின் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சி 2026ம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும், 2027ம் ஆண்டில் 3.4 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.உலகப் பொருளாதாரம் மீண்டெழுந்து வந்தாலும், அதன் வளர்ச்சி சீரற்றதாகவே காணப்படுகிறது என்றும் ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













