Home மாவட்டங்கள் சென்னை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்

சென்னை, அக். 4- இந்தியத் திரையுலகின் முன்னோடி இயக்குநரான சிங்கீதம் சீனிவாச ராவ், சனிக்கிழமை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், இந்திய சினிமாவில் புதுமையான, சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இயக்குநராகப் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இயக்குநர் கே.வி.ரெட்டி இயக்கிய ‘மாயாபஜார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் உருவாக்கிய திரைப்படங்கள் இந்தியத் திரையுலகில் முக்கியமான படைப்புகளாக அமைந்தன. குறிப்பாக, வசனங்கள் எதுவுமின்றி முழுக்க முழுக்க பின்னணி இசையை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட ‘பேசும் படம்’ பெரும் பாராட்டைப் பெற்றது. ‘அபூர்வ சகோதரர்கள்’ (1989) திரைப்படத்தில் ‘அப்பு’ என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தி சிங்கீதம் சீனிவாச ராவ் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து, ‘மைக்கேல் மதன காமராஜன்’ (1990) திரைப்படத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாதனை படைத்தார்.