
சென்னை, நவ. 8-
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டம் மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக 47 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 104 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்களும் எடுத்தனர். வில் யங் 6, டிம் ஷெய்பர்ட் 0, ஹென்றி நிக்கோல்ஸ் 11, டாம் லேதம் 7, கிளென் பிலிப்ஸ் 0, நேதன் ஸ்மித் 3, கைல் ஜேமிசன் 7, பிளேர் டிக்னர் 2 ரன்களில் நடையை கட்டினர்.
இந்திய அணி தரப்பில் குர்னூர் பிரார் 10 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அகிப் நபி, அன்ஷுல் கம்போஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 7 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 16 ரன்களை மட்டுமே வழங்கிய நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 176 ‘டாட் பால்களை’ வீசி அசத்தியிருந்தனர். இதையடுத்து 135 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 0, விராட் கோலி 7 ரன்களில் நடையை கட்டினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 28 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
















