Home விளையாட்டு ஹிர்தோய் இரட்டை சதம்: வங்கதேசம் 386 ரன்கள்

ஹிர்தோய் இரட்டை சதம்: வங்கதேசம் 386 ரன்கள்

சில்ஹெட், நவ. 8-
மேற்கு இந்தியத் தீவுகள்–வங்கதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 106.4 ஓவர்களில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அமிர் ஜாங்கூ 133 ரன்களும், கெவின் விக்ஹாம் 61 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 51 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தவூஹித் ஹிர்தோய் 29 ரன்களுடனும், முஸ்பிகுர் ரகிம் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3-வது நாள் ஆட்டத்தில் தவூஹித் ஹிர்தோய் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 304 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸர்கள் மற்றும் 19 பவுண்டரிகளுடன் 242 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம், வங்கதேச அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன.முஸ்பிகுர் ரகிம் 34, லிட்டன் தாஸ் 8, மெஹிதி ஹசன் மிராஸ் 16, ஹசன் மஹ்மூத் 1, தைஜூல் இஸ்லாம் 22, தஸ்கின் அகமது 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 111.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.