
சென்னை, அக். 22-
காங்கிரஸ் கட்சியின் (முதல் வேலை உறுதி) திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் ஓராண்டு தொழிற்பயிற்சி வழங்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் தொலைநோக்கு சிந்தனையை மோடி அரசு அப்பட்டமாக நகலெடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், விளம்பரத்திற்காக அவசரமாக ‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்’ (PMIS) என்ற பெயரில் நடைமுறைப்படுத்தியதால், அந்தத் திட்டம் தொடக்கம் முதலே தோல்வியடைந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதாக பா.ஜ.க. அரசு அறிவித்த நிலையில், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் திட்டத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.முதல் சுற்றில் 6.21 லட்சமாக இருந்த விண்ணப்பங்கள், இரண்டாவது சுற்றில் 4.55 லட்சமாகவும், மூன்றாவது சுற்றில் 3.50 லட்சமாகவும் குறைந்துள்ளன. நிறுவனங்கள் அறிவித்த வாய்ப்புகளில் சேர்ந்தவர்களின் விகிதம் முதல் சுற்றில் 6.9 சதவீதம் மட்டுமே. 1,27,508 வாய்ப்புகளில் 8,760 பேர் சேர்ந்தனர். இரண்டாவது சுற்றில் 1,18,948 வாய்ப்புகளில் 7,308 பேர் மட்டுமே சேர்ந்ததால், விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. மூன்றாவது சுற்றில் 1,54,366 வாய்ப்புகளில் 14,620 பேர் மட்டுமே சேர்ந்தனர்; இது 9.5 சதவீதம். அறிவிக்கப்பட்ட 1.54 லட்சம் வாய்ப்புகளில், 25,794 பேருக்கு மட்டுமே பணிச் சலுகைகள் வழங்கப்பட்டன. முதல் சுற்றில் சேர்ந்தவர்களில் 3,731 பேரும், இரண்டாவது சுற்றில் 2,880 பேரும் மட்டுமே பயிற்சியை நிறைவு செய்தனர். விதிகள் தளர்த்தப்பட்டு, பயிற்சிக் காலம் 12 மாதங்களில் இருந்து 6 முதல் 9 மாதங்களாகக் குறைக்கப்பட்டதுடன், உதவித்தொகை ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டும் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை.















