
புதுடெல்லி, செப்டம்பர் 21-
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பாரம்பரிய நட்பு நாடுகளைவிட, இஸ்ரேலுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு வலுவானதாக இருப்பதாக ஜென் ஸி தலைமுறையினரிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர உறவுகள் குறித்து இந்தியா இஸ்ரேல் மையம், ஏஐ தளங்கள் மூலம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 1990-களின் பிற்பகுதியிலிருந்து 2010-களின் தொடக்கக் காலம் வரை பிறந்த இளைஞர்கள் ஜென் ஸி தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர். இந்த தலைமுறையைச் சேர்ந்த 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் 52 சதவீதம் பேர், இந்தியா–இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு உறவு மிகவும் வலுவாக இருப்பதாகக் கருதுகின்றனர். இதன்மூலம், பாதுகாப்புப் பங்களிப்பில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலை மூன்றாவது இடத்தில் இளைஞர்கள் வைத்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இஸ்ரேலைத் தொடர்ந்து பிரான்ஸ் 51 சதவீத ஆதரவுடனும், அமெரிக்கா 46 சதவீத ஆதரவுடனும் உள்ளன. பாரம்பரியமாக இந்தியாவின் முக்கிய பாதுகாப்புப் பங்காளிகளாகக் கருதப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில், இஸ்ரேலுக்கான ஆதரவு இளைஞர்களிடையே வலுவடைந்துள்ளதாக கருத்துக் கணிப்பு காட்டுகிறது.















