Home மாவட்டங்கள் சென்னை உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை, அக். 22-
உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மூத்த குடும்ப உறுப்பினரும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தவருமான உம்மிடி எத்திராஜ், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 99. அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. சென்னையில் 1900-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் உம்மிடி ஜூவல்லர்ஸ், 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய தங்கம் மற்றும் வைர நகைக்கடையாகும். அந்த நிறுவனத்தின் மூத்த குடும்ப உறுப்பினராக உம்மிடி எத்திராஜ் இருந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய நாகரிகப் பாரம்பரியத்தின் புனித அடையாளமாகத் திகழும் செங்கோலை உருவாக்கிய உம்மிடி எத்திராஜ், என்றும் நன்றியோடும் மரியாதையோடும் நினைவுகூரப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்த நகைக் கலைஞர் உம்மிடி எத்திராஜ் என்றும் நினைவுகூரப்படுவார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அந்த செங்கோலை நிறுவியபோது அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நமது நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் அவர் செய்த பணிக்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.