
சென்னை: அக். 6-
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான செவிலியர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் மேடையில் இருந்தபோது, “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இன்றைய முதல்வர் விஜய் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என செவிலியர்கள் கோஷமிட்டனர்.
சங்கத் தலைவர் சுந்தரி பேசுகையில், “இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும். மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியத்தில் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்? கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.45 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். தவெக தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
மனோ தங்கராஜ் பேசுகையில், “சுகாதாரப் பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம உரிமையும் ஊதியமும் கிடைப்பதில்லை. இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. எனவே, செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்.தி.மு.க. ஆட்சியிலும் செவிலியர்கள் போராடியபோது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கட்சி சார்பில் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், உரிமைக்காக குரல் கொடுக்க வந்துள்ளதாகவும் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
இரவு வரை போராட்டம் நீடித்ததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் சிலர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. முன்னதாக, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மனோ தங்கராஜும் கைது செய்யப்பட்டார்.













