Home செய்திகள் உலக செய்திகள் ஒரு ரூபாய் நாணயத்தில் சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கம்

ஒரு ரூபாய் நாணயத்தில் சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கம்

காத்மாண்டு, ஜூலை 22- நேபாள அரசு வெளியிட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நாணயத்தில் செய்யப்பட்டுள்ள சிறிய வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தியாவுடனான நல்லுறவுக்கான பெரிய ராஜதந்திர முயற்சியாக பார்க்கப்படுகிறது. நம் அண்டை நாடான நேபாளத்தில் இருந்த முந்தைய அரசுகள், எல்லை தொடர்பாக நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன. குறிப்பாக, நம் நாட்டில் உள்ள லிபுலேக், காலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றுக்கு சொந்தம் கொண்டாடின. அந்தப் பகுதிகளுடன் கூடிய தேசிய வரைபடத்தையும் அந்த நாடு, 2020ல் வெளியிட்டது. அந்த வரைபடத்துடன் கூடிய, நாணயங்களையும் வெளியிட்டது.இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தால் ஆட்சி மற்றும் அரசியல் மாற்றங்கள் அங்கு ஏற்பட்டது. கடந்த மார்ச்சில் நடந்த தேர்தலில், மாணவர்கள் ஆதரவு பெற்ற, ராப் பாடகர் பாலேந்திர ஷாவின், 36, தேசிய சுதந்திர கட்சி அபார வெற்றி பெற்றது. அவர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், தற்போதைய புதிய அரசு, ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்து மட்டும் சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘லோ க்யாகர்’ மடாலயத்தின் படத்தை சேர்த்துள்ளது.