
திருமலை, செப். 19- திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4-ம் நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை திருமலையில் உள்ள வாகன மண்டபத்தில் இருந்து உற்சவரான மலையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதையொட்டி, 4 மாட வீதிகளில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 பிரிவுகளைச் சார்ந்த 551 நடனக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பக்தர்களையும் தேவஸ்தான அதிகாரிகளையும் வெகுவாகக் கவர்ந்த இந்தக் கலைநிகழ்ச்சிகள், பிரம்மோற்சவ விழாவின் சிறப்பை மேலும் அதிகரித்தன.இதனைத் தொடர்ந்து, இரவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பர் சர்வ பூபாள வாகனத்தில் எழுந்தருளினார். பிரம்மோற்சவ வாகன சேவைகளிலேயே அதிக எடை கொண்ட வாகனம் சர்வ பூபாள வாகனமாகும்.
















