Home மாவட்டங்கள் சென்னை வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை, நவ. 13-
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இந்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். தொடர்ந்து புயலாக மாறினால், ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ என்ற பெயர் சூட்டப்படும். ஞாயிற்றுக்கிழமை இது புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடகடலோர தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மலைப் பகுதிகளில் 15, 16ஆம் தேதிகளில் மிதமான மழையும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் லேசான மழையும் பெய்துள்ளது.