Home மாவட்டங்கள் பெங்களூர் பி.எஸ்.எல்.வி. மூன்றாம் நிலை இன்ஜின் சோதனை வெற்றி

பி.எஸ்.எல்.வி. மூன்றாம் நிலை இன்ஜின் சோதனை வெற்றி

பெங்களூரு: நவ. 13-
அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை இன்ஜின் சோதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட், சந்திரயான்-1, மங்கள்யான், ஆதித்யா-எல்1 உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி61 (இஓஎஸ்-09 செயற்கைக்கோள்) திட்டமும், 2026-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி62 (இஓஎஸ்-என்1 செயற்கைக்கோள்) திட்டமும் தோல்வியடைந்தன.இந்த இரு திட்டங்களிலும் ராக்கெட்டின் மூன்றாம் நிலையில் (பி.எஸ்.3) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தோல்வி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய அளவிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டு, தோல்விக்கான காரணங்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மூன்றாம் நிலை திட எரிபொருள் மோட்டாரின் வடிவமைப்பு, முனைப் பகுதி, இயந்திர இணைப்புகள் மற்றும் சீலிங் அமைப்புகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முக்கிய மாற்றங்களைச் செய்தனர். மேலும், மூலப்பொருட்கள் தேர்வு மற்றும் தரப் பரிசோதனை நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.
இதையடுத்து, மேம்படுத்தப்பட்ட மூன்றாம் நிலை இன்ஜினுக்கான தரைவழி நிலை சோதனை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனையில் கிடைத்த தரவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அடுத்தகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த வெற்றி, வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.