Home மாவட்டங்கள் சென்னை ஜெம் வீரமணி வழக்கில்அருண் ஐபிஎஸ் சேர்ப்பு

ஜெம் வீரமணி வழக்கில்அருண் ஐபிஎஸ் சேர்ப்பு

சென்னை: நவ. 13-
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக மொத்தம் 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மூடி மறைக்க முயன்றதாகவும், எனவே விசாரணையை சிபிஐக்கு மாற்ற
வேண்டும் என்றும் கோரி வாராகி என்பவரும், வழக்கறிஞர் ராஜசேகர் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.மேலும், சிறுமிகள் தொடர்புடைய
இந்த வழக்கின் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி துளிர் அமைப்பின் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் கூறியதாவது:
“சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் வீரமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 வழக்குகளில் 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.
இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதற்கிடையே, ஜெம் வீரமணி மீதான புகாரை முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அருண் ஐபிஎஸ் உட்பட 7 காவல் துறை அதிகாரிகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.