
சென்னை, அக். 6-
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையில் சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காவல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள 1.35 லட்சம் பணியிடங்களில், தற்போது 1.19 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால், காவல் துறையின் பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம், காவல் துறை பணிகளுக்கான தேர்வுகளை முடித்துவிட்டு, பணி நியமன ஆணைக்காக ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட 2,833 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள், 180 சிறைக் காவலர் பணியிடங்கள், 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. ஆனால்,
உயரம் அளவீடு தொடர்பான வழக்குகள் மற்றும் தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை காரணம் காட்டி, உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அடுத்தகட்ட நியமன நடவடிக்கைகள் காலவரையின்றி முடங்கியுள்ளன. தேர்வுகளை நிறைவு செய்த தகுதி பெற்ற இளைஞர்கள், பணி நியமன ஆணை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே,
இந்தச் சட்டச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். வழக்குகளை விரைந்து முடித்து, தேர்வுகளில் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு தாமதமின்றி பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும், காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.













