Home தலைப்பு செய்தி கேரள வெள்ளம் 9 பேர் பலி

கேரள வெள்ளம் 9 பேர் பலி

திருவனந்தபுரம், செப். 21-
கேரளாவில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் மண் சரிவு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; 2 பேரைக் காணவில்லை.
நிலைமை மேலும் மோசமடைந்து வரும் பின்னணியில், நிலைமையை மணிநேரத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வி.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்.
இடுக்கி, கோட்டயம் மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மலப்புறம் மாவட்டம் நிலம்பூர்-அமரம்பலம் பகுதியில் உள்ள கொட்டப்புழா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 9 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
வண்டூரில் இருந்து வந்த இந்தக்குழுவினர் ஆற்றில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளத்தின் வேகத்தில் சிக்கிக்கொண்டனர்.
உள்ளூர்வாசி ஒருவர் ஒருவரை மீட்டுள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 2 பேரின் உடல்களைக் கண்டெடுத்துள்ளனர்.
காணாமல் போன மேலும் 2 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், சிறப்பு பேரிடர் மேலாண்மைப் படையை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கோட்டயம் மாவட்டம் தீக்காய் அருகே உள்ள வேலாத்துச்சேரியில் ஏற்பட்ட நிலச்சரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 வயதான சங்கீதா அருள்லால் உயிரிழந்தார்.
சென்னையின் ஜவாஹர் நகரைச் சேர்ந்த இவர், தனது தோழியுடன் வாகமண்ணில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த சங்கீதா மீது சாலையில் சரிந்து விழுந்த மண் மூடியது.
அவரது தோழி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இடுக்கி மாவட்டம் கொட்டக்கம்பூரில் மழையில் இருந்து தப்பிக்க ஷெட்டில் தஞ்சமடைந்த 3 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.
மதியம் சுமார் 3.30 மணியளவில் மலையின் மேல் பகுதியில் இருந்து அதிக அளவிலான மண் சரிந்து ஷெட் மீது விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், ஒரு பெண் காயமடைந்தார்.
காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய வானிலை மையம் (IMD) கேரளாவின் பல பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மழை எச்சரிக்கை ‘ஆரஞ்சு அலர்ட்’ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சதீசனின் உத்தரவின்பேரில், பேரிடர் மேலாண்மை ஆணைய ஆணையர் விக்னேஷ்வரி ஐ.ஏ.எஸ், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
வானிலை நிலவரம் குறித்து இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்ட மக்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அபாயகரமான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்வது உட்பட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.