
சீனா, செப்டம்பர் 21-
சீனாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மக்கள் தங்களது முகத்தோற்றத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமத்தை வழங்கி வருமானம் ஈட்டும் புதிய முறை உருவாகியுள்ளது. ஏஐ நாடகங்கள், விளம்பரங்கள், காணொளிகள், விளையாட்டுகள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களில் பயன்படுத்துவதற்காக, பொதுமக்கள் தங்கள் முகங்களைப் பதிவு செய்து உரிமம் வழங்குகின்றனர்.உள்ளிட்ட தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. பயனர்கள் அடையாளத்தைச் சரிபார்த்து முகத்தைப் பதிவு செய்த பிறகு, உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வயது, பாலினம், தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் டிஜிட்டல் பட்டியலிலிருந்து முகங்களைத் தேர்வு செய்கின்றனர். ‘Girl-next-door’, ‘Rugged’, ‘Supermodel’ உள்ளிட்ட பிரிவுகளும் இதில் உள்ளன. தொலைக்காட்சி விளம்பரங்கள், குறுநாடகங்கள், காணொளி விளையாட்டுகள் போன்ற எந்த வகை உள்ளடக்கங்களில் தங்கள் முகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை பயனர்களே தீர்மானிக்கலாம். சில தளங்களில், அவர்கள் கட்டணத்தையும் நிர்ணயித்து, எத்தனை தயாரிப்புகளில் முகம் இடம்பெறலாம் என்பதையும் முடிவு செய்ய முடிகிறது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தகவலின்படி, இந்த முக உரிமத் தளங்களில் கட்டணம் 50 யுவான் (சுமார் ரூ.700) முதல் 99,999 யுவான் (சுமார் ரூ.14 முதல் ரூ.15 லட்சம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிமக் காலம், திட்டங்களின் வகை மற்றும் முகம் இடம்பெறும் தயாரிப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வருமானம் மாறுபடுகிறது.














