Home மாவட்டங்கள் சென்னை சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு உயர்வு

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு உயர்வு

திருவள்ளூர், அக். 22-
வடகிழக்குப் பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், புழல் உள்ளிட்ட சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய முக்கிய ஏரிகளுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் இந்த ஏரிகளின் நீர்மட்டமும் நீர் இருப்பும் உயர்ந்து வருகின்றன. நேற்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,126 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரிக்கு 520 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 385 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிக்கு 65 கன அடி, சோழவரம் ஏரிக்கு 55 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை 2,248 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,435 மில்லியன் கன அடி நீர் இருந்தது. 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 468 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் 236 மில்லியன் கன அடி நீரும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 138 மில்லியன் கன அடி நீரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.