
சென்னை, அக். 1-
தமிழகம் முழுவதும் சென்னை டாஸ்மாக் பொது மேலாளர் உட்பட 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டிஆர்ஓ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் எம். சாய்குமார் வெளியிட்டுள்ளார்.அதன்படி, சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணியாற்றி வந்த பி. சைலேந்திரன், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக பணியாற்றிய உமாமகேஸ்வரி ராமச்சந்திரன், நில நிர்வாக இணை ஆணையராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.விழுப்புரத்தில் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) இருந்த டி. அம்பயிரானந்தன், சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) மாற்றப்பட்டுள்ளார். சென்னையில் தமிழ்நாடு சுகாதார முறை திட்ட மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கே. மணிகண்டன், விழுப்புரம் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராகப் பணியாற்றிய எஸ். பானு, தமிழ்நாடு சுகாதார முறை திட்ட மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்யாறு சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) இருந்த வி. விமல்குமார், சென்னையில் சமூகநீதித் துறையின் மாநில ஆய்வுக்குழு உறுப்பினர்-செயலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளராக (வணிகம்) இருந்த எஸ். சிவராம்திருச்சி, ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.














