Home மாவட்டங்கள் சென்னை செவிலியர்கள் போராட்டம்: எடப்பாடி கண்டனம்

செவிலியர்கள் போராட்டம்: எடப்பாடி கண்டனம்

சென்னை, அக். 6-
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கை கொடூரத்தின் உச்சம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடிய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம், கொடூரத்தின் உச்சமாகும். “பாசிசம், பாயாசம்” என்று ஒத்திசைவு வசனங்களைப் பேசிய முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள இந்த பாசிச அக்கிரமத்தை, ‘ரீல்ஸ்’ முதல்வர் எவ்வாறு நியாயப்படுத்துவார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே செவிலியர்களின் முன்னிலையில் நின்று, தற்போதைய அமைச்சர்களாக உள்ள கட்சி நிர்வாகிகள் பேசியவை நினைவில் உள்ளதா? ஆட்சிக்கு முன்பு ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு மாறான செயல்பாடும் மேற்கொள்வதுதான் மாற்றமா? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சினையைச் சுட்டிக்காட்டினால்கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசுபவராக தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது துறையைச் சேர்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து அமைச்சர் ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? செவிலியர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதைவிட அவருக்கு என்ன பெரிய வேலை இருக்கிறது என்றும் கேட்டுள்ளார். போராட்டம் நடைபெற்ற இடத்தில் மின்சாரத்தைத் துண்டித்ததும், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி அழைத்துச் சென்று கைது செய்ததும் கீழ்த்தரமான அணுகுமுறை எனக் கூறிய அவர், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவித்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஜனநாயக முறையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார்.