
சென்னை, அக். 28-
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மிரட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்றும், லஞ்சம் வாங்கியவர்களை விட்டுவைக்க மாட்டோம் என்றும் முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார்.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக, “கரூரிலேயே போட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இது நடந்திருக்குமா?” என்று திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவின் 3 கோப்புகள் தன்னுடைய மேசையில் இருப்பதாக முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார்.
அதில் முதல் கோப்புதான் அன்பில் மகேஷ் தொடர்பானது என்று தெரிவிக்கப்பட்டது. ஒரே நாளில் ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டதாகவும், 2,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மிரட்டி பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது திமுகவினர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்,
திமுக முன்னாள் அமைச்சரும் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சேகர்பாபு, எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் மீது வேப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளரை ஒருமையில் மிரட்டியதாக சேகர்பாபு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. “நீயெல்லாம் ஆய்வாளரா?” என்று அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.















