
சென்னை: அக். 10-
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வராக பதவி ஏற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 அதிமுக எம்எல்ஏக்களும் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. மதுராந்தகத்தில் ஆளுங்கட்சியான தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளராக பரந்தாமன், அதிமுக வேட்பாளராக கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் மற்றும் சுயேட்சைகள் என 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக வேட்பாளராக சுகன்யா, அதிமுக வேட்பாளராக பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா மற்றும் சுயேச்சைகள் என 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இரண்டு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவியது. மதுராந்தகம் தொகுதியில் 1,84,422 வாக்குகள் மற்றும் 864 தபால் வாக்குகள் என மொத்தம் 1,85,292 வாக்குகள் பதிவாகின. தாராபுரம் தொகுதியில் 1,79,216 வாக்குகள், 1,316 தபால் வாக்குகள் என மொத்தம் 1,80,532 வாக்குகள் பதிவாகின.
மதுராந்தகத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆத்தூர் பகுதியில் உள்ள பல்நோக்கு பயிற்சி மையத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 21 சுற்றுகளாக வாக்குகள் எண்னப்பட்டன.
வாக்குப்பதிவான இயந்திரங்களில் 4 இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்த்ததால், வெற்றியை அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, 137 தபால் வாக்குகள் உட்பட 74,048 வாக்குகள் (39.96 சதவீதம்) பெற்று மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரன், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவிடம் வழங்கினார்.













