
பனாமா: அக். 10-
பனாமாவில் வெள்ளிக்கிழமை 7.7 மற்றும் 6.6 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகின. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், மின்சாரம், விமானப் போக்குவரத்து, மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டன. இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
முதல் நிலநடுக்கம் 12.6 கிலோமீட்டர் ஆழத்தில், பனாமா நகரிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில், மக்கள் தொகை குறைந்த பகுதியில் ஏற்பட்டது. அதன் மையப்பகுதிக்கு அருகிலுள்ள கட்டிடங்கள் இடிந்ததாகவும், அச்சமடைந்த மக்கள் வீதிகளில் திரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. நாட்டின் பல மாகாணங்களில் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஹெரேரா மாகாணத்தின் லாஸ் மினாஸ் பகுதியில் பல வீடுகள் சேதமடைந்ததாக 74 வயது ரிக்கார்டோ பிரவுன் தெரிவித்தார். “வீடு விரிசல் அடைந்துள்ளது; எங்கள் மீது இடிந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம்” என்று அவர் கூறினார். பெனோனோமெ நகரில் தேவாலயம் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்கள் சேதமடைந்த காட்சிகள் வெளியாகின. அதிபர் ரவுல் முலினோ அங்கு சென்று பார்வையிட்டார். சித்ரே மற்றும் லாஸ் சாண்டோஸ் மாகாணங்களிலும் சேதம் ஏற்பட்டதாகப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.
நாட்டின் ஆறு மாகாணங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது. டோகுமென் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கின. பனாமா நகரில் அலுவலகங்கள் ஊழியர்களை முன்கூட்டியே அனுப்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிகள் நாடு முழுவதும் மூடப்பட்டன. எனினும், பனாமா கால்வாய் மற்றும் கோப்ரே பனாமா செம்புச் சுரங்கத்தின் செயல்பாடுகள் வழக்கம்போல் தொடர்ந்தன.
இந்த நிலநடுக்கம் அசுவேரோ–சோனா பிளவு அமைப்பில் ஏற்பட்டதாக புவியியல் நிறுவனம் தெரிவித்தது. சுனாமி அச்சுறுத்தல் பின்னர் நீக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் வளர்ச்சி வங்கி, பனாமாவுக்கு 5 கோடி டாலர் கடன் வசதியும், 2.5 லட்சம் டாலர் நன்கொடையும் அறிவித்துள்ளது.















