
சென்னை: செப். 21-
தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு வரும் ஜனவரி மாதம் வரை இருக்கும் என்பதால், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதை மறுத்த சுகாதாரத் துறை, அவர் உண்ணிக் காய்ச்சல் எனப்படும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தது.
இதுதொடர்பாக சோமசுந்தரம் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு விடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், உண்ணிக் காய்ச்சல் பாக்டீரியா கிருமியால் ஏற்படுவதாகவும், ஆள் உயரம் வளரும் புல், புதர்கள் மற்றும் வயல்வெளிகளில் வாழும் ஒருவகை உண்ணி, பூச்சி கடிப்பதால் பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்பு காடுகள் மற்றும் வயல்வெளிகளில் பணியாற்றுவோரிடம் மட்டுமே காணப்பட்ட இந்த நோய், தற்போது பருவநிலை மாற்றம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு காரணமாக அனைத்து இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை பாதிப்பு அதிகமாக இருக்கும். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், உடல்வலி, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொதுநல மருத்துவர் பி.வி.பாலமுருகன் கூறுகையில், வயல்வெளி மற்றும் புல்வெளிகளில் நடமாடும்போது பேன்ட், காலணி, முழுக் கை சட்டை அணிய வேண்டும் என்றார். டெங்கு போன்று அதிக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வறட்டு இருமல் ஏற்படலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். சிகிச்சை தாமதமானால் நுரையீரல், மூளை, இதய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், இணைநோய்கள் உள்ளவர்கள் தாமதமாக வந்தால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்யப்படுகிறது.













