
தெஹ்ரான், ஜூலை 23-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் அனல் மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கோபம் அடைந்த ஈரான், தங்களால் எண்ணெய் விற்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஏற்றுமதியே இல்லாமல் போகும் என்று பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மீது 12-வது நாளாக தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்கா, அந்த நாடு மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 12-வது நளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை முடக்கினால், ஈரானில் பாலங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கடும் கோபமடைந்த ஈரான், தங்களால் எண்ணெயை விற்க முடியாத நிலை ஏற்பட்டால் எந்த நாட்டாலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை வரும் என்று எச்சரித்துள்ளது. ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த பிராந்தியத்தில் எங்களால் எண்ணெய் விற்க முடியாத நிலை வந்தால் வேறு யாராலும் விற்க முடியாது. எங்கள் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், பிராந்தியத்தில் எந்த உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது. அமெரிக்க படைகள் இல்லாமல் இருந்தால்தான் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.















