
சென்னை, அக். 6-
சர்க்கரை நோய்க்கான டெனிலிக்ளிப்டின் மருந்தை உட்கொள்வதால் அரிதாக ஏற்படக்கூடிய புல்லஸ் பெம்பிகாய்டு பாதிப்பு குறித்து, அந்த மருந்தின் அட்டையில் பக்கவிளைவு எச்சரிக்கையை குறிப்பிட வேண்டும் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டைப் 2 சர்க்கரை நோய்க்கு மெட்ஃபார்மின், சிடாக்ளிப்டின், செமகுளூடைன், டெனிலிக்ளிப்டின் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இம்மருந்துகளால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெனிலிக்ளிப்டின் மருந்தை உட்கொண்டவர்களிடம் காணப்பட்ட பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அந்த மருந்தை உட்கொள்வதால் சிலருக்கு புல்லஸ் பெம்பிகாய்டு என்ற நோய் அரிதாக ஏற்படுவது தெரியவந்தது. இந்த நோயால் தோலில் அரிப்பு ஏற்படுவதுடன், வலியுடன் கூடிய நீர் கொப்பளங்களும் உருவாகக்கூடும்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசனை நடத்தி, நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் டெனிலிக்ளிப்டின் மருந்துகளின் அட்டையில் புல்லஸ் பெம்பிகாய்டு பாதிப்பை பக்கவிளைவாக குறிப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும், இந்த எச்சரிக்கை மருந்து விளம்பரங்களிலும் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.














