
புதுடெல்லி, அக். 9-
தலைநகர் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களால் அசாதாரண சூழல் நிலவுவதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவடைந்துள்ளது. இதில் 13 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எஸ்ஐஆர் பணியில் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகவும், வாக்குத் திருட்டில் ஈடுபட்ட அவர் பதவி விலக வேண்டும் என்றும் இண்டியா கூட்டணி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த 6-ம் தேதி அசோகா சாலையில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.நியூ மோதி பாக் காலனியில் உள்ள ஞானேஷ் குமாரின் வீட்டுக்கு வெளியே இண்டியா கூட்டணி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் ஆக்ரா, விஜய் நகரில் உள்ள அவரது பூர்வீக வீட்டையும் காங்கிரஸ், சமாஜ்வாதி தொண்டர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அங்கும் மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கியுள்ளது. இதையடுத்து, சத்தீஸ்கரில் பணியாற்றி வரும் மத்திய ஆயுத போலீஸ் படையைச் சேர்ந்த 7,000 வீரர்களை டெல்லிக்கு வரவழைக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீஸார் 15,000 பேரை பாதுகாப்புப் பணியில் நியமித்துள்ளனர். காஷ்மீர், மேற்கு வங்கத்திலிருந்தும் மத்திய பாதுகாப்புப் படையினர் வரவுள்ளனர். தற்போது டெல்லியில் சுமார் 20,000 வீரர்கள் பாதுகாப்பில் உள்ளனர். அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை 23,000 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை வட்டாரங்களின்படி, ஞானேஷ் குமாரின் பாதுகாப்பில் உள்ள சிஐஎஸ்எப் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் 24 மணி நேரமும் சிஐஎஸ்எப் பாதுகாப்பும், வெளியே டெல்லி போலீஸ் பாதுகாப்பும் இருக்கும். தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் செல்லும் வழியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இண்டியா கூட்டணியின் போராட்டம் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். போராட்டம் தொடரவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.















