
ஹாவேரி, நவ. 26-
ஹாவேரி மாவட்டம் பியாடகி தாலுகா மோட்டேபென்னூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-ல், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ், மோட்டேபென்னூர் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸுக்குள் பயணி ஒருவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க ஆம்புலன்ஸ் ஊழியர்களும், அப்பகுதி மக்களும் கடுமையாகப் போராடினர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, உள்ளே சிக்கியிருந்த அந்தப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டார்.விபத்தில் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹாவேரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பியாடகி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து பியாடகி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.















