Home மாவட்டங்கள் சென்னை தமிழகத்தில் அதிக தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் அதிக தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு

சென்னை, அக். 22-
தமிழகம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகள் மற்றும் மாத்திரைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு சார்பிலும், அந்தந்த மாநில அரசுகள் சார்பிலும் மருந்துக் கிடங்குகள், வினியோக மையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளின்போது தரமற்றவை என கண்டறியப்படும் மருந்துகளின் விவரங்கள், மத்திய அரசுக்கு மாதந்தோறும் அனுப்பப்படுகின்றன. இந்த விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்திலும் வெளியிடப்படுகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நாடு முழுவதும் 220 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் தயாரித்ததாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள்,
உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளின் தரத்தில் குறைபாடுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.கண்டறியப்பட்ட 220 தரமற்ற மருந்துகளில் 45 சதவீதம், அதாவது 100 மருந்துகள், தமிழகம், கர்நாடகம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் தலா 38 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 24 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் கிடைக்கும் தரமற்ற மருந்துகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து தொகுக்கப்பட்டு, மாதந்தோறும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.