
சென்னை, அக். 13-
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், அதன் தாக்கத்தால் தமிழகத்தில் அக். 15-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அக். 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக். 14-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.













