
சென்னை: அக். 12:
தமிழகத்தில் ரூ.13,000 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘‘புதிய சிகரங்களைத் தொடும் தமிழகத்தை உருவாக்க மத்திய அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்கும்’’ என்று உறுதி அளித்தார்.மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் ரூ.13,000 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கும் நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ரூ.4,900 கோடியில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டமான பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தைத் திறந்து வைத்தார். ரூ.3,700 கோடியில் 4 வழி திருவாரூர் புறவழிச் சாலை உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.என்எச்-744-ல் 36 கி.மீ. நீளமுள்ள, 4 வழிச்சாலையான வடுகப்பட்டி – தெற்கு வெங்கநல்லூர் சாலை, என்எச்-744ஏ-ல் 30 கி.மீ. நீளமுள்ள, 4 வழிச்சாலையான மதுரை சுற்றுச் சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார். என்.எச்.83-ல் நாகப்பட்டினம் – தஞ்சாவூர் பிரிவில் 4 வழி திருவாரூர் புறவழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.நான் முதல்வராக இருந்த போது முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமரான பிறகு ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அரசுகள் மாறிக் கொண்டிருந்தன. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சியும் இங்கிருக்கும் மக்களுக்குச் சேவை புரியும் எனது மன உறுதியும் எப்போதும் தொடர்ந்தது. இதே உறுதிப்பாட்டுடன் முதல்வர் விஜய் உடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன்.
இன்று தமிழகத்தில் ஏராளமான சாலை மற்றும் ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகம் ரூ.17,000 கோடியில் உலகத்தரம் வாய்ந்ததாக மெகா கன்டெய்னர் மற்றும் பசுமை எரிசக்தி மையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்துவதாக இருக்கட்டும், கடல்பாசி பூங்கா மேம்பாடு திட்டம் ஆகட்டும் இதில் மத்திய அரசு பல்வேறு உதவிகள் புரிந்து வருகிறது.
விவசாயிகள் கடன் பற்று அட்டை இப்போது மீனவர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவ குடும்பங்கள் மற்றும் அத்தொழில் சார்ந்தவர்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது. புதிய சிகரங்களைத் தொடும் தமிழகத்தை உருவாக்க மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.தமிழக மக்களின் உழைப்பு தேசத்தின் எதிர்காலத்துக்கு வலு சேர்க்க பெரும் பங்காற்ற வேண்டும். வளர்ச்சி அடைந்த தமிழகத்தில் இருந்து வளர்ச்சி அடைந்த பாரதத்தைப் படைக்கும் உறுதிப்பாட்டை மெய்யாக்குவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.













