
சென்னை, அக். 11- டெல்லியில் இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் பெ.சண்முகம் (சிபிஎம்), மு.வீரபாண்டியன் (சிபிஐ), பழ.ஆசைத் தம்பி (சிபிஎம்-எல்) ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் ஆதரவை தெரிவித்து இருந்தன. இந்நிலையில் ஜந்தர்மந்தர் பகுதியில் மத்திய அரசின் டெல்லி போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளனர்.போராட்டக்காரர்களை ஒன்றுசேர விடாமல் ஆங்காங்கே கைது செய்துள்ளனர். டெல்லிக்கான 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 54 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35 ஆயிரம் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை செவிமடுக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் கைதாகி உள்ளனர்.
ஜனநாயக மறுப்பின் உச்சகட்டமாக அரங்கேற்றப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அடக்குமுறை மற்றும் கைதைக் கண்டித்தும், ஞானேஷ்குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆங்காங்கே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்படுகிறது.














