
பெங்களூர்,அக்.11-
ரூ.600 விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேண்டாம் அமுல்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாக்குவாதம்
பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட வித்யாபீட சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 30). கட்டட தொழிலாளியான இவர் ‘கோழி மஞ்சு’ என்றும் அழைக்கப்படுகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர், மது குடிக்கப் பணம் தேவைப்பட்டதால் தனது செல்போனை மஞ்சுவிடம் அடமானம் வைத்து ரூ.600 பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதுபோதையில் வந்த பழனி, மஞ்சுவிடம் தனது செல்போனை உடனடியாகத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாலிபர் பலி
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பழனி, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மஞ்சுவின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மஞ்சுவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சி.கே. அச்சுக்கட்டு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இக்கொலை தொடர்பாக பழனியைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.















