
சென்னை, நவ. 11-
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. தீபாவளி நாளில் மட்டும் 13 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், இரு நாட்களில் இந்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்ததாகவும் கூறப்படும் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இந்த நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பொது அமைதியை நிலைநாட்டத் தவறியது, தொடர்ச்சியான கொலைகள், காவல்துறையினருக்கே ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மை ஆகியவை இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. தேனியில் மதுபோதையில் தகராறு செய்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட 56 வயதான சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் நடுரோட்டில் தாக்கிக் கொல்லப்பட்டார். கடலூரில் தப்பியோடிய ரவுடியைப் பிடிக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசு கத்தியால் குத்தப்பட்டார். மேலும், சிறைக்காவலை மீறி கைதிகள் தப்பியோடிய சம்பவமும் உளவுத்துறை மற்றும் நிர்வாகத் தோல்வியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.திருச்சியில் பட்டாசு பொறி தொடர்பான விவகாரத்தில் ஐ.டி. ஊழியர் கிறிஸ்டோபர் ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொல்லப்பட்டார். 17 வயது சிறுவர்கள் நண்பர்களையே வாய்க்கால் கரையில் வெட்டிக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. மது மற்றும் போதைப்பொருள் ஆதிக்கத்தால் ஏற்படும் திடீர் வன்முறைகளை உள்ளூர் உளவுத்துறை முன்கூட்டியே கணிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது. பண்டிகை காலத்தில் தீவிர போலீஸ் ரோந்து இல்லாததும் குற்றங்களுக்கு வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 24 வழக்குகள் உள்ள நவீன், காரில் வந்த கும்பலால் வெட்டப்பட்டார். மானாமதுரையில் விக்னேஷ் கொல்லப்பட்டார். ரவுடிகளுக்கிடையேயான பழைய பகையை போலீசார் முறையாகக் கண்காணிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அரசை விமர்சித்துள்ளனர். இதையடுத்து, டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசரக் கூட்டம் நடத்தி, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.















