
திருமலை: செப். 21-
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் உற்சவமூர்த்தியான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகளில் நடைபெற்ற அனுமன் வாகன சேவையை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பலர் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.பக்த அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்பரை பக்தர்கள் பக்தியுடன் தரிசித்தனர். வாகன சேவையின்போது மாட வீதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடினர். இந்த நிகழ்வுகளில் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழாவையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் தங்கத் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார்.
தங்கத் தேர் ஊர்வலத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அவர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தொடர்ந்து, நேற்றிரவு கஜ வாகன சேவை நடைபெற்றது. கஜ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வாகன சேவையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நடனக் கலைஞர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். காலை அனுமன் வாகன சேவை, மாலை தங்கத் தேரோட்டம், இரவு கஜ வாகன சேவை என 6-ம் நாள் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.













