
தேனி: நவ. 9
தேனி சமதர்மபுரம் அருகே மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கும்பலால் தாக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) செந்தில் குமார் உயிரிழந்தார். காவல் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி சமதர்மபுரம் பகுதியில் நேற்று போதையில் இருந்த சில இளைஞர்கள் சாலையை மறித்து பட்டாசு வெடித்தபடி, அதை செல்போனில் பதிவு செய்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்குமாறு அந்த இளைஞர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், செந்தில் குமாரைச் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த செந்தில் குமாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். செந்தில் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் இரவோடு இரவாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் கவுதம் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.எஸ்.ஐ.யைத் தாக்கியதாகக் கூறப்படும் கும்பல் குறித்து போலீசார் முதல் கட்டமாக 4 பேரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













