Home செய்திகள் தேசிய செய்திகள் போபால் ரயில் நிலையத்தில் தீபாவளி கூட்ட நெரிசல்

போபால் ரயில் நிலையத்தில் தீபாவளி கூட்ட நெரிசல்

போபால், நவ. 9-
தீபாவளியை முன்னிட்டு போபால் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் கடும் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்தக் காட்சியில், நெரிசலுக்கு மத்தியில் பச்சிளம் குழந்தை ஒன்று ரயில் பெட்டிக்குள் அனுப்பப்படுகிறது. குழந்தையைப் பெற்றுக்கொண்டு எப்படியாவது ரயிலில் ஏறிவிட வேண்டும் என அதன் தந்தை முயற்சிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ, பண்டிகைக் காலங்களில் ரயில் பயணங்களில் வட மாநிலங்களிலும் தென் மாநிலங்களிலும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.இதுதொடர்பாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், “சுதந்திர இந்தியாவின் 79 ஆண்டுகாலப் பயணத்துக்குப் பிறகும், சாமானிய மக்களின் ரயில் பயணம் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு இது சோகமான எடுத்துக்காட்டு” எனத் தெரிவித்துள்ளார்.மேலும், வந்தே பாரத் ரயில்களின் கழிப்பறைகள் நன்றாக இருப்பதாகவும், புல்லட் ரயில் வரவுள்ளதாகவும் பெருமை பேசப்படுகின்றது. ஆனால், சாமானிய மக்கள் பயணிக்கும் பொதுப் பெட்டிகளின் நிலை இதுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே அமைச்சர் இந்தக் காட்சிகளை ஒருமுறை பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆண்டு முழுவதும் நகரங்களில் கடுமையாக உழைத்துவிட்டு, தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களே இவர்கள் என்றும், கையில் பயணச்சீட்டு இருந்தும் ரயில் பெட்டிக்குள் கால் வைக்கக்கூட இடமில்லை என்றும் பதிவில் கூறப்பட்டுள்ளது. கதவுகளில் தள்ளுமுள்ளு ஏற்படுவதுடன், ஜன்னல்கள் வழியாகவும் பயணிகள் உள்ளே நுழைய முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் தலைக்கு மேலாக பச்சிளம் குழந்தையைத் தூக்கி பெட்டிக்குள் அனுப்பும் காட்சி நெஞ்சைப் பதற வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டிகைக் கால கூட்டம் முன்கூட்டியே தெரிந்திருந்தும், ஏன் கூடுதல் ரயில்கள், கூடுதல் பொதுப் பெட்டிகள், நடைமேடைகளில் கூடுதல் பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குளிர்சாதனப் பெட்டிகள் சிலருக்கானவை; பொதுப் பெட்டிகள் கோடிக்கணக்கான மக்களுக்கானவை என்றும், சாமானிய மக்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வீடு சேர்வதே வளர்ச்சி என்றும் பதிவில் கூறப்பட்டுள்ளது.