Home செய்திகள் தேசிய செய்திகள் பெட்ரோலில் அதிக எத்தனால் கலப்பு புகார்

பெட்ரோலில் அதிக எத்தனால் கலப்பு புகார்

திருவனந்தபுரம்: நவ. 9
பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, கேரள அரசும் பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்க அனுமதி உள்ள நிலையில், கர்நாடகாவில் சுமார் 30 சதவீதம் முதல் 31.5 சதவீதம் வரை எத்தனால் கலந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அதிக எத்தனால் கலப்பால் வாகனங்களின் மைலேஜ் குறைவது, குறைந்த தூரத்திலேயே எரிபொருள் தீர்ந்துவிடுவது, பயணத்தின்போது வாகனங்கள் நின்றுவிடுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கர்நாடகாவைத் தொடர்ந்து கேரளாவிலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அனூப் ஜேக்கப், பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலக்கப்படுவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் அனுமதிக்கப்பட்ட 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டதாக இதுவரை எந்தப் புகாரும் இல்லை. இருப்பினும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனூப் ஜேக்கப் எச்சரித்துள்ளார்.கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறுகையில், மாநிலம் முழுவதும் 67 இடங்களில் பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும், விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோல் பங்குகள் மட்டுமின்றி, எத்தனால் கலக்கும் மற்றும் விநியோகிக்கும் இடங்களிலும் ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.எனினும், அதிக எத்தனால் கலப்பை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துள்ளன. மாதிரி சேகரிப்பில் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும், முறையான தகவல் அளிக்காமல் சோதனை நடத்தப்பட்டதால் முடிவுகளை ஏற்க முடியாது என்றும் அவை தெரிவித்துள்ளன.