Home தலைப்பு செய்தி பட்டாசு வெடித்த சிறுவன் பலி

பட்டாசு வெடித்த சிறுவன் பலி

பெங்களூரு, நவ. 9-
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பல இடங்களில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. டெல்லியில் பட்டாசு வெடித்ததில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கர்நாடக மாநிலத்திலும் பல இடங்களில் பட்டாசு வெடித்ததால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் பெங்களூருவில் மட்டும் பட்டாசு வெடித்ததில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.
டெல்லியில் 10 வயது சிறுவன் ஒருவன் கையில் பட்டாசை பிடித்துக்கொண்டு வெடிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பட்டாசு அவனது கையிலேயே பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தின் வீரியத்தால் சிறுவனின் கை மற்றும் உடலின் மேல் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே சிறுவனின் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், கடுமையான ரத்தப்போக்கு மற்றும் பலத்த காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி சிறுவன் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தான் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கு பட்டாசுதான் காரணமா அல்லது பட்டாசின் தரம் குறித்தா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாநிலத்திலும் விபத்துக்கள்
தீபாவளி கொண்டாட்டத்தின் போது கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் பட்டாசு விபத்துகள் நடந்துள்ளன. தலைநகர் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்ததில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
பட்டாசு விபத்தில் காயமடைந்த 42 பேரில் 17 பேர் தாங்களாகவே பட்டாசு வெடித்தபோது காயமடைந்தவர்கள் என்றும், எஞ்சியவர்கள் மற்றவர்கள் வெடித்த பட்டாசால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
தொட்டபள்ளாப்பூரில் பட்டாசு வெடித்தபோது சிறுவன் ஒருவனின் கண்ணில் ராக்கெட் பட்டாசு நேரடியாக வந்து மோதியது. அந்த சிறுவன் பெங்களூருவில் உள்ள மிண்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவனின் வலது கண் பார்வை 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சிறுவனின் கண்ணுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வை முழுமையாக திரும்புமா என்பது சந்தேகமே என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து சிறுவனின் தந்தை சிவசங்கர் கூறுகையில், “நேற்று இரவு வீட்டின் அருகில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது என் மகனின் கண்ணில் ராக்கெட் வந்து மோதியது. தன் மீதான எந்தத் தவறும் இன்றி என் மகன் பார்வையை இழந்து தவிக்கிறான்” என்று கண்ணீருடன் கூறினார்.
பட்டாசு விபத்துகள் தொடர்பாக நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் 22 வழக்குகளும், மிண்டோ மருத்துவமனையில் 16 வழக்குகளும், பிரபா மற்றும் சங்கரா கண் மருத்துவமனைகளில் தலா 2 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் 42 பேர் பட்டாசு விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தவறினால் கண் பார்வையையே இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு இடையே, மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா சினகுருளி கிராமத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.
சினகுருளி கிராமத்தைச் சேர்ந்த மகதேவ் என்பவருக்குச் சொந்தமான வணிக வளாகத்திலேயே இந்த தீ விபத்து நடந்துள்ளது. இந்த வளாகத்தில் ரவி என்பவருக்குச் சொந்தமான பாத்திரக் கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று திடீரென ரவியின் கடையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் தீயின் கொழுந்துவிட்டு எரியும் ஜுவாலை பக்கத்து கடைகளுக்கும் வேகமாகப் பரவியது. இதனால் அங்கிருந்த மெடிக்கல் ஸ்டோர் மற்றும் மளிகைக் கடைகளுக்கும் தீ பரவி, 3 கடைகளிலும் இருந்த பாத்திரங்கள், மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதனால் கடை உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற கடைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை. மின்சாரக் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்