Home மாவட்டங்கள் பெங்களூர் 7 பேர் கொடூரக் கொலை: சடலங்களை மூட துணிகள், கெமிக்கல் வாங்கியது அம்பலம்

7 பேர் கொடூரக் கொலை: சடலங்களை மூட துணிகள், கெமிக்கல் வாங்கியது அம்பலம்

பெங்களூரு, நவ. 9-
கர்நாடக மாநிலம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி இந்துசேகர் இந்த கொடூர சம்பவத்திற்கு தேவையான பொருட்களை தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள கடைகளிலேயே வாங்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை சுற்றி பேக் செய்வதற்கு தேவையான பொருட்கள், ரத்தக் கறைகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயன கெமிக்கல்கள் உள்ளிட்ட பல பொருட்களை குற்றவாளி வாங்கியதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் கடைகளில் கிடைக்காத சில பொருட்களை வாங்குவதற்காக யஷ்வந்த்பூர் மற்றும் ஆர்.எம்.சி. யார்டு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் அவன் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து குற்றவாளி எந்தெந்த கடைகளில் என்னென்ன பொருட்களை வாங்கினான் என்பதை கண்டறிவதற்காக, காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை நடந்த பகுதியில் சில இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகள் கிடைக்காததால், அவற்றை சேகரிக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட 7 பேரில் 5 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சங்கர் மற்றும் நளினி ஆகிய இருவரின் சடலங்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே 7 வயது சிறுவன் புனீத்தின் சடலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் நந்தி மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது. சுனிதா மற்றும் ரூபாவதி ஆகியோரின் சடலங்கள் தமிழ்நாட்டின் சேலம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. சிவகுமார் மற்றும் திவ்யா தம்பதியினரின் சடலங்கள் மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டன.
பிரேத பரிசோதனை:
நேற்று மைசூரு சாமுண்டி மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவகுமார் மற்றும் திவ்யா ஆகியோரின் சடலங்களுக்கு, இன்று மைசூரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
குற்றவாளி சேகர் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்னிலையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். பிரதான சாலையில் வாகனத்தை நிறுத்தி, அங்கிருந்து பக்கத்திலிருந்த பள்ளத்தில் சடலங்களை தூக்கி வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளி அளித்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், சிவகுமார் மற்றும் திவ்யாவின் சடலங்களை மீட்டனர். இந்த கொடூர கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.